சின்னஞ்சிறு வயதில்
சிலிர்க்கும் இரவில்
வீட்டின் முற்றத்தில்
கொடியில் உலரும்
ஆடைகளுக்குள் பின்னிருந்தும்
ஜன்னல் ஓரத்தில்
திரைச்சீலை ஊடகமாய்
கண்ணுக்குள் படர்ந்திட
வெண்ணிலவுக்கு சேலைக்கட்டியும்
இளஞ்சோலை அல்லாத
பூந்தொட்டியில் பூப்பறித்து
பூச்சரம் தொடுத்து
பின்னந்தலையில் சூட்டியும் - நான்
கனவுகளை கண்டேன்...
இளமையின் காலத்தில்
கனவுகளுக்கு முடிவேதுமில்லாமல்
வான்வெளியில் இரவினில்
உன்னோடு என்னையும்
மிதக்க செய்கிறாய்...
வயல்வெளியில் பகலினில்
என்னோடு கைப்பிடித்து
உலாவர செய்கிறாய்...
பட்டாடையல்ல உந்தன்
பட்டுமேனி கட்டியிருப்பது
புத்தாடையாக இருக்கவேண்டும்
பளீரென்ற வெண்ணிறத்தோடு
புத்தாண்டை சொல்லவந்தாய்
புத்துணர்ச்சி எனக்களித்தாய்....
மதியானவள் நிலா என்னவளோ
மனதின் கனவுகளே நினைவாக்கவோ
மங்கையாய் மண்ணில் பிறந்தாயோ? - இல்லை
மீண்டும் கண்ணில் தெரிந்தாயோ?