Saturday, October 29, 2011

மரம்...




இலையும் கிளையும் இல்லாத மரமும்

சிறகும் இறகுமுள்ள எங்களுக்கு ஆதரவாய் ...

மரம் எரிக்கும்வரை மனிதர்களுக்கு துணையாய் ...

எரித்து கரியானாலும் உதவியாய் சிலநேரம்...


Friday, October 28, 2011

புண்ணியமும்... பாவமும்...

செய்திட்ட பாவங்கள் யாவும்
தீர்ந்து போகட்டும் என்றோ
தாயவளும் காசிக்கு செல்கிறாள்...

ஒருரூபாய் கூட கைச்செலவுக்கு
கொடுத்து அனுப்பிவைக்க முடியாமல்
பெற்றமகனும் பெரும்பாவியாய் இங்கே...

Thursday, October 27, 2011

தீபாவளியும்... நீயும்....



பட்டாடைக்கும் உன்மேனிக்கும்
மென்மையில் போட்டியோ?
தோற்றுவிட்ட பட்டுக்கு
உன்பெயரையே முடிச்சூட்டியோ?

மறந்துவிட கூடுமென்றோ
விளம்பரமும் நித்தம்
அறிமுகம் செய்துகொண்டே
உன்பெயரை பலமுறை...

Tuesday, October 25, 2011

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... அனைவருக்கும்....




 தீபாவளி பண்டிகை வேண்டாமென சொல்லவில்லை.... கொண்டாட கூடாதென சொல்லிய ஒரு நபருக்கு அளித்த பதில்.. அதுவும் அவருடைய கேள்விக்கு...

// இராவணனைக் கொன்றதற்காக எடுக்கப்படுகின்ற விழா தீபாவளியானால்,

அந்த விழாவினைத் தமிழர் கொண்டாடலாமா?

தமிழனைக் கொன்ற ஆரியனை வணங்கலாமா?

தமிழனுக்குச் சுய உணர்வு எனவொன்று இருக்க வேண்டுமல்லவா?? //

இது எனக்கு ஒரு நண்பர்... தீபாவளி வாழ்த்திற்கு கூறியது... அதன் விளைவாக இதனை எழுதுகிறேன்...


எந்தவொரு மதமும்
எதற்கும் இழிவில்லை
எந்தவொரு மொழியும்
எதற்கும் கீழில்லை
எத்தனையோ வேதாந்தம்
சொல்லும் மனிதா
எல்லாம் வார்த்தைதானோ?

இன்று ஏனோ
இனம் பிரித்து
தமக்குள் பார்க்கின்றாயே?
தமிழ் இனத்தை
சேர்ந்த ஒருவனை(இராவணனை)
கொன்ற செயலுக்கு
ஆரிய இனத்தலைவனுக்கு(இராமனுக்கு)
விழாவா? இதுதேவையா?
தீபாவளி நமக்கில்லையென்று
காவியம் சொல்கிறாய்...
நியாயம் பேசுகிறாய்
இறக்கும் தமிழன்மீது
இருக்கும் தமிழன்மீது
இல்லாத அக்கறை???
இறந்த தமிழன்மீது!!!
வாழ்க நீகொண்டிருக்கும்
தமிழன் மீதான
தன்னிகரற்ற அன்பு...

இருக்கும் தமிழனுக்காக
இறக்கும் தமிழனுக்காக
உரிமைபெற வேண்டுமெனில்
தீபாவளி வேண்டாமென
உரக்கச்சொல் நாடறிய
உன்னோடு நானும்
தோளோடு தோளாக
சேர்கிறேன் ஒன்றாக...

சிந்திப்போம்... செயல்படுவோம்.... செயல்படுத்துவோம்...

Sunday, October 23, 2011

வேற்றுமையில் ஒற்றுமை...



வயிறு பெருத்தது
வாய் குமட்டுகிறது
வாந்தி வருகிறது
மயக்கம் தலைக்கேறுகிறது
தலை சுற்றுகிறது
உலகம் மறை(ற)க்கிறது...

இதுவென் கர்ப்பத்தின்
அறிகுறிகள் மட்டுமல்ல...
எந்தன் கணவனின்
போதை நிலையும்...

Thursday, October 20, 2011

ஏக்கம்... (மணமாகாத பெண்ணின்)



பெற்றோர் எனக்காக வைத்திட்ட
பெயர் ஒன்றுமட்டுமே வாழ்வில்...

என்னை அழைக்க நானே
எனக்குள் இட்டுக்கொள்வது எத்தனையோ?

இந்நாள்வரை அதிலெதுவுமே நிரந்தரமாய்
இல்லாமல் எல்லாமே கா(ல)த்தோடு...

மணமகன் ஒவ்வொருவரின் ஜாதகம்
மனைக்கு வரும்போதும் மாறிக்கொண்டே...

அவனுடைய பெயருக்கு பின்னால் - சேர்த்து
இவளுடைய பெயரை எண்ணிக்கொண்டே...

Tuesday, October 18, 2011

பெண்ணாகிய நான்...



பழகிபோன வாழ்க்கையாய் ஆகிவிட்டதால்
பலநேரம் அதற்குள் என்னை
பதுக்கிகொள்ள ஆரம்பித்து விட்டேன் - மகிழ்ச்சியாய்
பட்டாம்பூச்சியென பறக்க முடியாவிட்டாலும்...

புளித்துவிட்டது வாழ்க்கை போதுமென
பாகம்பேசி அதனிலிருந்து என்னால்
வில(க்)கிகொள்ள முடியாமலும் தவிக்கிறேன் - போராட்டமாய்
பட்டுபுழுபோல் நெளிந்துக்கொண்டே என்நாட்கள்

பிறப்பதற்கு முன்பே என்விதி
அப்போதே தெரிந்திருந்தால் ஒருவேளை
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேன் - கரைக்கும்
வைரமுத்துவின் வைரவரிகளை போன்று...

மணப்பதற்கு முன்னாவது என்விதி
நான் அறிந்திருந்தால் ஒருவேளை
உந்தன் கர்ப்பத்தையாவது சுமக்காமல் - கரையாமல்
எந்தன் காலத்தை தள்ளியிருப்பேன்...

வாழ்வில் உண்டாகிய இக்கதி
இறைவன் செய்திட்ட சதியோ?
எனக்கும் எழுதபடாத விதியோ? - என்னவோ?
மதியிருந்தும் மிதிபடுகிறேன் வழியில்லாமல்...

Friday, October 14, 2011

ஒதுக்கவில்லை.... ஒதுங்கிகொள்கிறேன்...


தோழியே!

உலகத்தில் எங்கோ வசித்தாலும்
உன்னாலும் நான் வாழ்கிறேன்
நீசொல்லி கேட்டிட ஆசைதான்...

ஆனால்

உன்னால் தான் அழுகிறேனென்று
நீமட்டுமல்ல இனியார் சொல்லியும்
கேட்கவே கூடாதென நினைக்கிறேன்...

அதனால்...

எனக்காகவும் நீ அழவேண்டாம்...
என்னாலும் நீ அழவேண்டாம்..
எந்நாளும் நீ அழவேண்டாம்...

Thursday, October 13, 2011

அறியாமல்...



கடல்நீர் எடுத்து சிலையெடுத்தால்
காற்றில் அவன் ஆவியாகி
காணும் சிற்பமாய் உப்பாய்
கையில் இருக்ககூடும் உன்னோடு...

கண்ணீர் எடுத்து சிறுபுள்ளியாய்
கதை எழுத தொடங்குகிறாய்...
கறிக்கு உதவாத ஏட்டுசுரக்காயாக - இருப்பினும்
காலம் உன்துணை இருக்கட்டும்...

Tuesday, October 11, 2011

இது தான்..



நான் சொல்வதற்கும்
நீ செய்வதற்கும்
உள்ள வித்தியாசம்...
நான் ஆண்
நீ பெண்
என்பதுபோல் நமக்குள்...

Monday, October 10, 2011

அலைபேசியின் - கோபமோ? நாணமோ?



அன்பே!
என்னருகினில் இல்லாமல்
தொலைவிலிருந்து என்னோடு
நீபேசும் காதல்மொழி
அத்தனையும் ரகசியமாய்
கேட்டு மகிழ்ந்தவன்...

என்னருகில் இன்றுநீ
நாசிக்குள் நுழைய
முற்படும் தூசியாய்
புல்லாங்குழல் எழுப்பும்
இன்னிசை கீதமாய்...

காதோடு எந்தன் பெயரினை
கனிவோடு செவ்விதழில் நீயழைக்க
அதனைக்கேளாது கோபம் கொண்டோ?
அதனைக்கேட்டு நாணம் கொண்டோ
தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டு.

Sunday, October 9, 2011

மாற்றம்.

ஒருவரிடம் சகஜமாக பேசுவதுபோல்
அனைவரிடமும் பேசாதே என்றேன்..

அவளு(னு)ம் தன்னை மாற்றிக்கொண்டாள்(ன்)
மிக்க மகிழ்ச்சிதான் எனக்கு...

அவள்(ன்) வாழ்வில் மாற்றிக்கொண்டது
முற்றிலும் என்னிடம் பேசுவதையே...

Saturday, October 8, 2011

நீ!!!


பசுமை நிறைந்த வயல்வெளியில்
கருந்தோகை விரித்த வண்ணமயில்...

பசுமை நிறைந்த சோலைக்குள்
சேலை கட்டிவந்த சொர்ணசிலை...

பசுமை நிறைந்த தோட்டத்திற்குள்
பூக்கள் சூடிவந்த தொங்கும்தோட்டம்...

பசுமை நிறைந்த மண்ணிற்கு
தண்ணீர் பாய்ச்சவந்த ம(க)ங்கை...

பசுமை நிறைய மனதிற்கு
மயக்கம்தர பூமிக்குவந்த முழுமதி...

Friday, October 7, 2011

உன்னால் என்பெயரும் கவிதைதான்...



உந்தன் பார்வையிலோ
உனக்கு என்றோ
ஓராயிரம் கவிதை
எழுத முடியாமல்போனாலும்
ஓராயிரம்முறை எழுதுகிறேன் - சிந்திக்காமல்
என்பெயரினை கவிதையென...

கடலில் பிறக்கும்
ஒவ்வொரு அலையும்
புதுவடிவத்துடன் இருப்பதுபோல்
ஒருவார்த்தை என்றாலும்
நீயழைக்கும் ஒவ்வொருமுறையும் - உன்னால்
கவிதையாகிறது என்பெயர்...

Thursday, October 6, 2011

எனக்குள்...



சின்ன சின்ன ஆசைகள்
என்று ஒன்றொன்றாய் சொல்லி
கொண்டே போக போக
பெருகி கொண்டே போகிறது...
ஆனால்!
ஒவ்வொன்றிக்கும் ஒரு தொடர்பு
உள்ளுக்குள் புதைந்து இருக்கிறது
என்னவென்று யோசித்து பார்த்தால்
எல்லாவற்றிலும் கலந்திருப்பது நீயே...

Wednesday, October 5, 2011

பகல்நிலவு...



விடிந்துவிட்ட வேளைபொழுது
வீட்டின் பின்பக்க
வெண்ணிறசுவர் நீள(ல)வானமாய்
விரிந்திருக்க அதில்
குட்டிநிலவாக மஞ்சள்நிறத்தில்
கண்ணுக்கு அழகியகாட்சியாய்
வாகன கண்ணாடியிலிருந்து
சூரியஒளியின் பிரதிபலிப்பு...

காணும் பொருள் யாவும்
எந்தன் மனதுக்குள் இருக்கும்
உந்தன் முகத்தை தோன்றுவிக்க
அப்பிம்பத்திலும் உயிராகவே நீயெனக்கு...

Tuesday, October 4, 2011

நித்தம்...



கைவிரல்களையும் கைகளையும்
மடக்கும்போது நமக்குள்
உண்டாகும் வீரியம்...
கைகளை விரித்தால்
காணாமல் போவதுபோல்
நீயருகினில் இருந்தபோது
பலத்துடன் இருந்தேன்...
நீயில்லாத இப்பொழுது
இருந்ததை எண்ணிபார்த்து
பலவீனமாய் போகிறேன்...

Sunday, October 2, 2011

புரியாமல் நான்...

குருதி பாயாத
கருவிழி வழியே
மெல்ல நுழைந்தாய்...
பின்பு அங்கிருந்து
உதிரம் பாயும்
உறுப்புகளிலெல்லாம் கலந்தாய்...
உயிரற்று போக
உறைந்து போகும்
இரத்தம் போல...
இரக்கமற்று என்னைவிட்டு
ஏனோ பிரிந்து - செல்கிறாய்
என்கருவிழியை விட்டும்...