Friday, April 30, 2010

நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...

விந்தை உலகம்...

வெளிநாட்டில் யாரோ ஒருவன்..
சந்திரனில் நீரும் பனிக்கட்டியும்
இருப்பதை உறுதி செய்தான்...

உள்நாட்டில் யாரோ ஒருவன்...
கையில் சரக்கும் சால்னாவும்
கொண்டு போனால் போதுமென்றான்...

Tuesday, April 27, 2010

என்னுயிர் நண்பா!

என்னுயிர் நண்பா!

உன் உள்ளத்தின்
உள்ளேயுள்ள அன்பினை
பாசத்தினை பற்றினை
பண்பாக பரிசளித்தாய்
வாழ்த்தை வரிகளில் - அதனால்
என் நிலையில் தடுமாறினேன்...

என்னருகில் நீ இருந்திருந்தால்
மகிழ்ச்சியில் அரவணைத்திருப்பேன்...
கண்ணுக்கு எட்டாத தொலைவிலும்
கண்ணால் காணாத நிலையிலும்
நாம் கடந்து இருப்பதனாலும்
செய்வதறியாது தவிக்கின்றேன்...

ஏனெனில்...
நன்றியென்னும் நல்வார்த்தை
நட்பெனும் நல்லுறவில்
உபயோகிக்ககூடாதுயெனும் உன்
உடன்படிக்கையின் உடன்பாட்டினால்தான்
என் செய்வேன் உனக்காக....

Monday, April 26, 2010

உன் பெயர்....

உன்னின் அழகான பெயரை
என்னவென்று தெரிந்திருந்தும்
உன்னிடம் மீண்டும் கேட்டது - நான்
என்னபேசுவதென்று தெரியாமலும்
எப்படிபேச துவங்குவதென்று தெரியாமலும்
மட்டுமில்லையடி என்னுயிரே...

நீ கொண்ட பெயரை
நான் கொண்டு அழைக்க
நீ படும் ஆனந்தமும்...
நீ கொண்ட பெயரை
நீயே உதட்டில் உச்சரிக்க
அதனை கேட்டு மனதுக்குள்
நான் அடையும் பேரானந்தமும்
எல்லையற்றதை நீ உணரவேண்டியே...

Saturday, April 24, 2010

தாயா...? தெய்வமா...?


மெல்லிய பூவின்மடியில் மற்றொரு பூ
அள்ளி அணைத்ததில் காட்டியது தாயன்பு
என்னை மெய்சிலிர்க்க வைத்தது அரவணைப்பு...
உன்னை காண்கையில் எனக்கொரு பூரிப்பு
உன்னை கண்டதும் மனதில் தோன்றியது மதிப்பு
உன்னை வார்த்தையில் வர்ணிப்பது எனக்கும் சிறப்பு...

Thursday, April 22, 2010

தமிழும்... காதலியும்... -1

நான் ரசிக்கும் கடலும் கரையும் நீ!
நான் ருசிக்கும் காதலும் காமமும் நீ...

நான் வியக்கும் கிழக்கும் கிரகமும் நீ!
நான் மயங்கும் கீதமும் கீற்றும் நீ...

நான் கோடையில் தேடும் குற்றாலுமும் குடையும் நீ!
என் கண்ணில் தோன்றும் கூச்சமும் கூர்பார்வையும் நீ...

நான் கேட்கும் கெட்டிமேளமும் கெஞ்சலும் நீ!
என் தலைகவசமாய் கேசமும் கேடயுமும் நீ...

நான் கையில்கொள்ளும் கைக்கடிகாரமும் கைக்குட்டையும் நீ!!!

நான் விரும்பும் கொட்டாத மழையும் கொல்லாத வெயிலும் நீ!
நான் தரிசிக்கும் கோயிலும் கோபுரமும் நீ...

நான் வாழ்வில் அடையும் கெளரியும் கெளரவமும் நீ!!!

Wednesday, April 21, 2010

தமிழும்... காதலியும்...

உயிரெழுத்துகள் மட்டுமல்ல தலைகீழாய்
உன்னால் ஆகிபோனேன் நானும்
தலைகீழாயானது குறையாய் அல்ல
தனிதிறமையாய் என்னுள் உன்னால்...

ஒளவையின் தமிழாய் நீ!!!

ங்கார நாதமாய் நீ! 
லிக்கும் ஓசையாய் நீ...

ம்புலனாய் நீ!

க்கமும் ஏழிசையும் நீ!
ச்சமும் எழிலும் நீ..

னமும் ஊக்கமும் நீ!
ள்ளமும் உறக்கமும் நீ - நுரை

ரலும் காற்றும் நீ!
தயமும் இரத்தமும் நீ...

ழ்மனதும் ஆருயிராய் நீ!
டிவயிறும் அனைத்துமாய் நீ...

வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...

Tuesday, April 20, 2010

காதல் திருமணம் - ஓர்பார்வை

அன்று..
பிடித்த பெ(ஆ)ண்
என்றபோதும் மறுத்ததும்
படித்த பெ(ஆண்)
என்றபோதும் முறைத்ததும்
இந்த சமூகம்...

இன்று...
சமூகம் பார்க்கும் ஜாதிகளை
மற(றை)ந்தது என்றபோது
முகம் மலர்ந்தேன்...

ஆனால்,
வருமானம் தரும் நிதிநிலையை
பார்த்து என்றபோது
அகம் நொந்தேன்...

Monday, April 19, 2010

செம்பூவே... நீயே...

செவ்வரளி போல் செம்மேனி நிறம்
செம்பருத்தி போல் செதுக்கிய முகம்
செந்தாமரை போல் செவ்வாயில் சிரிப்பு
செந்தாழம்பூ போல் செம்மையான வாசம்
செண்பகபூ போல் மணக்கும் குணம்
செந்தூரபூ போல் தேனூறும் குரல்
செவ்வந்தி போல் மென்மையான இடை
செர்ரிபூ போல் வெண்ணிற பாதம்

Sunday, April 18, 2010

நீர்நிலைகள்...


ஜாதிகளை பெருக்க தெரிந்த மனிதா
நதிகளை பெருக்க மறந்தது ஏனோ?

அரசியல்வாதியே!
ஆற்றில் மணலை கொள்ளைக்கொண்டும்
நாட்டில் மக்களை சுரண்டிக்கொண்டும்
உன்பெயரை நிலைநாட்டும் நினைவாலும்
பணத்தாலும் வாழ்ந்துக்கொண்டு நீ....
என்னை தூர்வார நினைக்காமலும்
மறந்ததாலும் அழிந்துக்கொண்டு நான்...

மனிதர்களே!!
நீங்களே ஒற்றுமையுடன் இல்லாதபோது
எங்களை இணைக்கும் எண்ணம் சாத்தியமோ?
உங்களில் ஊடுருவியிருக்கும் அவலங்களை
நீங்களே களையெடுக்க முடியாதநிலையில்
பின்னர் எப்படி என்னில் கல(ந்திரு)க்கும்
குப்பைகளை அகற்ற இயலும்?

என்கரையின் ஓரங்களில் அமர்ந்து
பொங்கிவரும் ஓசையிலும் இசை
பாட்டின் ஜதிபாடிய காலம் அ(ஒ)ழிந்து.
என்பாதையின் வழிகளில் அமர்ந்து
போதைதரும் வஸ்துகளும் மது
பாட்டிலின் சுதிசேர்த்து கொண்டு இன்று.

கண்கவர் காட்சியாய் காடு களனி
வயல் குளமென எல்லாகளங்களும் 
பாய்ந்தவன் வறண்டு போனேன்
மீன்பிடித்தலும் நீச்சலும் மாறி
ஆடுகளம் சீட்டாடகளம் என்றென
வாழ்கையில் உருமாறி போனேன் இன்று

என்னை மூடிமறைத்து
உனக்கு அடுக்குமாடி
கட்டிடம் பலகட்டி
வளமாய் வாழ்கின்றாய்
என்னின் சோகங்கள் மறை(ற)ந்து
உங்களுடன் சுகமாய் தோன்றும் நாள் எந்நாளோ?

Saturday, April 17, 2010

ஆதிவாசியும்... தீயும்...


கண்கள் நான்கும் சேர்ந்து
காதல் தீயும் பிறக்கும்

உடல்கள் இரண்டு சேர்ந்து
காம தீயும் பிறக்கும்

என்பதனை உணர்வுகளின் வழியே
உணராதவன் என்பதனாலோ அவன்

சிக்கிமுக்கி கற்களை உரசி
தீமூட்டுவதை கண்டுபிடித்தானோ?

Friday, April 16, 2010

தலையணை - 2


நான் தலையணையை 
அணைத்து உறங்குவது
உந்தன் நினைவில்
உன்னை அரவணைத்து
கொண்டு மட்டுமல்ல...
எந்தன் நெஞ்சினில்
குடியிருக்கும் உனக்கு
வலிக்ககூடாது என்றும்தான்...

தலையணை -1

Thursday, April 15, 2010

விலைமகள் (தெரு ஓரங்களில்)

கண்ணில் காந்தம் கொண்டு
மனதில் காமம் கொண்டு...
உள்ளத்தில் சோகமும் கொண்டு
உடலில் ரோகமும் கொண்டு..
பையில் காண்டமும் கொண்டு
கையில் ரொக்கம் வேண்டி...

Wednesday, April 14, 2010

சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்

இறைவா!

நித்தம் நிம்மதி நிறைந்த
நெஞ்சும் நித்திரையும்

முயற்சியும் முன்னேற்றமும் முடிவில்
முத்தான முத்திரையும்

சிரிப்பும் சிந்திப்பும் சிறந்த
சிங்கார சித்திரையாய்

வையகத்தில் வாழ்போருக்கு வழங்கிட
விழி(ரி)த்துடுயுன் விழித்திரையை...

இன்னருளை இணங்கிடு இவ்வுலகில்
இறைவேண்டி இனியவன்...

Sunday, April 11, 2010

அதனாலும், ஆனாலும்...


(என் தோழியின் மனம்... வாழ்வில் நிம்மதியை தேடி...)

என் குணத்தையும்
காதலிக்கின்றாய் என்றிருந்தேன்
என் பணத்தை மட்டும்
காதலித்தது ஏனோ?

அன்று...
உன்னோடு சேர்ந்து காதலில்
விளையாடிய விளையாட்டு கொஞ்சம்தான்.
இன்று...
உன்னால் அழிந்து வாழ்வில்
திருமணமே விளையாட்டாய் வாழ்நாளில்.

உன்னால்...
வாழ்கையில் கண்டேன் ஏமாற்றம்
வாழ்வில் அடைந்தேன் துயரம்
அதனாலும், ஆனாலும்
வாழ்வில் கொண்டேன் மாற்றம்
வாழ்கையில் அடைவேன் உயரம்....

மீண்டு நான்
விதியென்னும் உன்வடிவில் தொலைந்தேன்
மதியென்னும் மறுவடிவில் பிறந்தேன்
நானிருப்பது மட்டுமல்ல தொலைவு
உன்னிடமிருந்தும் தொலைந்து...

அதிர்ச்சியும்... ஆனந்தமும்...


யாரும் அற்ற தனிமையில்
மாலை பொழுது மறை(ற)ந்து
இரவு தொடங்கும் வேளையில்
நீயும் நானும் இனிமையாய்
கண்களால் மட்டும் பேசிக்கொண்டு...
உன்உடலில் மெல்லிய ஓர்அதிர்ச்சி
காரணம்....
எதிர்பாரமல் துண்டிக்கப்பட்ட
மின்வெட்டினால் தோன்றிய பயமோ?
இல்லை...
தெரியாமல் உன்னைத்தொட்ட
என்கரங்களினால் உண்டாண உணர்வோ?அந்தவேளையிலும் உன்னின்
முகத்தில் கண்டேன் சிகப்பை...
காரணம்...
வான்மேகத்தில் மறைந்திடாமல்
நிலாமகள் நம்மை பார்க்கின்றாள்
என்று நெஞ்சில் கூச்சமோ?
இல்லை...
மீண்டும் மின்இணைப்பு வந்து
நம்மை பிரித்து விடும்
என்று முகத்தில் வெட்கமோ?

Friday, April 9, 2010

நம்பிக்கையும்... துணையும்...


மனிதா!!!
விடியல் என்பது மரபு
நாளை மீண்டும் உலகம்
விடியும் என்பதும் நம்பிக்கை...வாழ்வில்
முடியாமல் போவது இயல்பு
நம்மால் மீண்டு(ம்) செய்ய
முடியும் என்பதும் நம்பிக்கை...


உலகில்
வாழ்ந்திட தேவை நம்பிக்கை
நம்பிக்கையே என்றும் நம்துணை
நம்பிக்கையும் துணையுமே நம்வாழ்கை...

Thursday, April 8, 2010

இயற்கையின் சா(கோ)பம்

கெடுவான் கேடு நினைப்பான்
பழமொழியல்ல
முதுமொழிதானடா சற்றே
நீயும் யோசித்து பாரடா...

இன்று எனக்கு நீ 
கேடு விளைவித்து கொண்டு
நாளை உன்னையே நீ
கெடுத்து அழித்துக்கொள்ள...


ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும் விலைநிலங்களாக....
மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....


டிஷ் ஆன்டனா...
வீட்டுக்கு வீடு ஒர் மரம்
வளர்க்க இடமில்லை - ஆனால்
வீட்டின் தளங்களின் மேலே
குடையாய் விரிந்து கொண்டு
எட்டி பார்த்து கொண்டும்...


செல்போன் டவர்...
மரம்போல் உயர்ந்து இருக்கின்றாய்
பறவைகளும் ஏமாந்து உன்னிடம்
மனிதனை விட உயர்ந்து இருக்கின்றோம்
என்று தஞ்சம் அடைந்து கொண்டு
உயிர்களை இழந்து கொண்டும்...

இதுபோல் எத்தனையோ
அறிவியலின் வளர்ச்சிகள்
மனிதனின் வாழ்கையை
அழிக்கும் நிகழ்ச்சிகள்...

Wednesday, April 7, 2010

உன்னின் குரல்...

என்றோ!
உன்னோடு பழக்கம் தோன்றும்முன்
உன்னை பார்த்த முதல் தினம்
உன்னிடம் கேட்ட முதல் கேள்வி
உன்னின் மெல்லிய குரலில் கூறிய
உந்தன் இனிமையான பெயராய் பதில்...
அதனை எத்தனைமுறை மனதுக்குள்
உச்சரித்து பார்த்து மகிழ்ந்திருப்பேன்...
இன்று அந்த உன்னத உணர்வை
ஓர்திரைபடத்தில் வசனத்தின் வரிகளாய்
கேட்டபோதும் உள்ளம் மகிழ்கின்றேன்...

இன்றும் என் நெஞ்சில் எங்கோ உன்னின் குரல்
ஓர்மூலையில் மெல்லிசையாய் ஒலித்துக்கொண்டே...

Tuesday, April 6, 2010

கண்ணீர்... (பாட்டு வடிவில்)

என் கண்களில் கண்ணீரை கண்டேன்
காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச
வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல்
வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும்
மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
                                                       
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
                                                        
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
                                                       
(என் கண்களில்...)

Sunday, April 4, 2010

சிட்டுக்குருவி - படிக்க, ரசிக்க, சிந்திக்க & செயல்பட...


மனிதா!
உன் தாயும் அன்று
என்னை உனக்கு காட்டி
உணவினை வாயில் ஊட்டியிருப்பாள்
எனக்கும் சேர்த்து இட்டிருப்பாள்
அதில் அவள் சொன்ன
கருத்து உனக்கு புரிந்ததா?
இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து
உண்ண வேண்டும் என்பதனை நானறிந்தேன்.


உன் வீட்டின் விட்டத்தில் கூடுகட்டி
உன் கண்முன்னே வாழ்ந்தவன் அன்று...
மிருககாட்சி சாலைகளில் கூண்டிற்குள் - நாங்கள்
காணும்காட்சி பொருளாய் இன்று...
என்னை நாளை உன்வம்சத்திடம்
அடையாளம் காட்ட நானிருக்கமாட்டேன்... 
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....
ஏய் குருவி! சிட்டுக்குருவி ...
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட...
சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுபாடு...
திரைபாடல்களிலும் நீயும் மகிழ்ந்து நானும்
மகிழ்ந்திட்ட நாள்கள் வாழ்வில் இனிவருமோ?

நீங்கள் மகிழ்வாய் ஒருபுறம் வாழ்ந்திட
வேடர்களின் செயல்களில் கொஞ்சமும்
மரங்களை அழித்ததில் அதிகமும்
நச்சுபொருள்களின் கலப்பில் இன்னுமும்
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சில் - இன்று
மொத்த இனமும் நாங்கள் அழிந்துகொண்டு...

காலத்தின் மாறுதலாய் சுழற்சியாய் இருக்கலாம்
நேற்று அழிந்துபோன உயிரனங்கள் பலவுண்டு
இன்று அழிந்துபோகும் உயிரனங்களும் பலவுண்டு
நாளை அழிந்துபோகும் உயிரனங்களில் நீயுமுண்டு...(இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்பது எப்படி?
நம்மை நாமே பாதுகாத்துகொள்ள இயலாத இந்த உலகில் மற்ற உயிரனங்களை பற்றி சிந்திக்க செயல்பட நேரமிருக்காது. ஆனால் அவைகளை போன்று நாமும் அழிந்துவிடுவோம் என்ற கோணத்தில் சற்றே சிந்திப்போம் செயல்படுவோம்... இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்போம்.)

Friday, April 2, 2010

சேமிப்பு...

 


நண்பா!
இதயங்கள் செல்லரிப்பது
நேற்றைய எண்ணங்களால்…
சோகங்களை சேமிக்காதே
இன்பத்தின் புதைகுழிகள்…
நல்லதை(நினைவுகளை)  சேமித்துவை
நாளைய வழிகாட்டிகள் அவை…

இலட்சியம் இல்லாத இதயம்
வெறும் சதைகோலம்தான்...
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை
சிதறும்  குப்பைமேடுதான்...

கால்கள் தடைபட்டால்
வெறுப்பு மனதிற்கு மட்டும்தான்
பாதகமில்லை.
மனது தடைபட்டால்
இழப்பு வாழ்வுக்கும் சேர்த்துதான்
வசந்தமில்லை.

எனக்கு...
இன்றும் வசந்தகாலம்
இப்பொழுதும் உன்நினைவு
மனதில் எழுகையில்
மலர்கிறது கண்ணீர்…