Sunday, October 31, 2010

கனவும்... வரமும்...


நேற்று நான்
கண்ட கனவுகளை
என்மனத்தின் ஆசையாய்
அறிந்துக்கொண்ட இறைவன்
நான்வேண்டும் வரமென
வேண்டாமலே எனக்களித்தான்
உடலையும் உள்ளத்தையும் - இன்று
நனைத்து குளிரச்செய்தான்.

கண்ணில்கண்ட கார்மேகம்
கண்களையும்யும் அகத்தினையும்!
தீண்டும் ஈரக்காற்று
தேகத்தையும் நுரையீரலையும்!!
மண்ணில்சேரும் மழைத்துளி
உடலையும் உள்ளத்தையும்!!!
அடையசெய்து என்னுள் - அளவற்ற
மகிழ்ச்சிபொங்க செய்தான்.

நேற்றுநீ அனுபவித்ததும்
இன்றுநான் அனுபவித்ததும்
ஒருதலையாய் என்றாலும்
மனதுக்கு இன்பமாய்...
என்மனத்தின் ஆசையை
இறைவனே அறியும்சமயம்
நீயறியாமலா போய்விடக்கூடும் - அன்பே
எந்தன் வாழ்வில்.

Friday, October 29, 2010

மழையும்... கனவும்...


நீ அங்கே!
நான் இங்கே!!

மழையில் மெய்தனை
நனைத்துக்கொண்டு நீ!
கனவில் மெய்தனை
இழந்துக்கொண்டு நான்!!

உன்செயலால் கற்பனையில்
மழையை ரசித்துக்கொண்டு
இங்கே மழையே
இல்லாமல் போனாலும்...

கார்மேகம் சூழ்ந்த
வானமாய் உன்மீது
மோகம் கொண்டது
என்மனம்!

ஈரப்பதம் கலந்த
காற்றாய் என்மீது
இதமாய் வீசுது
உன்மனம்!

மழையில் மேனியில்
ஒன்றான துணிபோல்
அணைப்பிலும் முத்தத்திலும்
நனைத்து மூழ்கடித்தாய்...

மண்ணில் சேர்ந்திட்ட
நீர்த்துளியாய்
என்னுடல் கலந்து
மறைந்திட்டாய்....

Thursday, October 28, 2010

தேடல்


என்னுடல் தேடும் 
பொருளாய் நீயிருந்திருந்தால்
உன்னை தேடிக்கொண்டே 
வாழ்வில் இருந்திருப்பேன்!!!

என்மனம் நாடும் 
உயிராய் இருப்பதனால்
உன்னில் எனைநான் 
தேடி (கண்டு)பிடித்துக்கொண்டு...

Wednesday, October 27, 2010

நிலாவின் இந்திய உலா....


வானத்தில் உலாவரும் நிலா எந்தன் காதலி
மண்ணில் பிறந்திட்ட இந்தநிலா எந்தன் சகோதரி...
என் வாழ்நாளில்...

பலபேருக்கு நீங்கள் உடன்பிறவா சகோதரிதான்
எனக்கோ நீங்கள் உடன்பிறந்த சகோதரியாய்
என் உள்ளுணர்வில்...

என்றும் மங்காத மறையாத பெளர்ணமியாய்
சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்த இருமுறையும் 
என் வாழ்வில்....

முழுநிலவினை காணாது பிறையை ரசித்தநாட்களாய்
இணையத்தின் வழியும் அலைபேசி வழியும்
என்னோடு பேசியநாட்கள்...

இந்தியாவையும் எங்களையும் விட்டுபறந்து புகழோடு
வானளவு உயர்ந்து லண்டன் பிரிந்துசென்றதும் - அமாவாசையாய்
என்மனது இன்று...

Tuesday, October 26, 2010

சந்திப்பு (பழைய காதலன் காதலி)

அன்று...
கோயில் பிரகாரம்
அமைதியான நடைபாதை
கனவான வாழ்கையாய்
கண்ணில் காண்கிற
தம்பதியர் எல்லாம்
நீயும் நானுமாய்
மனத்தில் திரிந்து...

இன்றும்...
நிகழ்வான வாழ்வில்
தம்பதியராய் இல்லாவிடினும்
நேற்றைய நினைவுகளுடன்
இறைவன் சன்னதியில்
நீயும் நானும்
மண்ணில் மறையாத
அன்பில் ஒன்றிணைந்து...

Monday, October 25, 2010

என் பயணங்கள்...

கண்மூடி பார்த்தால்
உன்னோடு பேசிக்கொண்டு
கண்விழித்து பார்த்தால் - இருக்கையில்
என்னருகில் நீயில்லாமல்

வாய்விட்டு பேசுவதுபோல்
உள்ளுணர்வு பின்புதான்
தெரிகிறது மனம்தான் - அயராமல்
உன்னோடு பேசிக்கொண்டு...

உன்னை !
புதிதாய் பார்க்கிறேன்
காதலியாய் ஏற்கிறேன்
மனைவியாய் அடைகிறேன்
கருவாய் சுமக்கிறேன்
குழந்தையாய் பெற்றெடுக்கிறேன் - (காதல்)பயணங்கள்
ஒவ்வொன்றும் சுகபிரசவமாய்...

Friday, October 22, 2010

வெட்கம்...

வெட்கம்

நாணலை போல் நாணம் கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல் போகிறேன் உன்னோடு...

***************

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!

***************


உந்தன் உணர்வுகளை ரசிக்க தெரிந்த
பின்புதான் உன்னை நான் நேசிக்கிறேன்...
உன்னை உள்ளத்தை ரசிக்க தொடங்கிய
பிறகு உணர்வற்ற ஜடமாய் போகிறேன்...
உணவாய் உன் உணர்வுகள் மட்டும் என் மனதுக்கு.

***************

நீயும்... நானும்

உடல் மட்டும் தானே தள்ளி அமர்ந்திருப்பது....
உள்ளம் என்னவோ என்னுள் தானே இருப்பது...
உடல்கள் உரசாமல் போனாலும் - மனம்
சரசம் கொள்ளாமலா போகும்...

Wednesday, October 20, 2010

ஓயாத இரவுகள்...

பலநாட்கள்
கனவில் உன்னோடு
பேசிக்கொண்டு தூங்காமல்
இருப்பதும்...

என்பாதி தூக்கத்தில்
எழுந்து உன்னிடம்
ஏதோ கேட்பதற்கு
என்னருகில் தேடுவதும்...

கேட்கவந்ததை அறியாமல்
என்னவென்று எண்ணியும்
மீதிபொழுதை விடியும்வரை
தூங்காமல் கழிப்பதும்...

என்வாழ்வில்
ஒன்றாகிவிட்ட நிகழ்வாய்
இன்றும் என்னோடு - மனதுக்குள்
இதமான உணர்வோடு...

Tuesday, October 19, 2010

இன்பம் - அவளும்... கனவும்...

காற்றும் நீரும்
ஒன்றாய் இணைந்த
சூழலே இன்பமாய்...

என்றும் இல்லாமல்
இன்று அருகினில்
அவளிருந்தது இன்பமாய்...

இருசக்கர வாகனத்தில்
அவன்பின்னால் இவள்
அமர்ந்ததும் இன்பமாய்...

வீசும் எதிர்காற்றில்
நில்லாமல் இவன்கேசம்
பறந்ததும் இன்பமாய்...

பறந்துமூடிடாத கழுத்துபரப்பில்
செவிமடலின்கீழ் மெலிதாய்அவள்
இதழ்களைக்கொண்டு மூடியதும்
(வாழ்கை)பயணத்தில் இன்பமாய்...

கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் ....

Thursday, October 14, 2010

காலம் வெல்லும்...


ஆதவனே!
உலகத்தில் ஒருநாள்
உன்முகம் பார்க்காவிடின்
உடல்மீது நீவிழாவிடின்
உயிர்வாடி விடக்கூடும்...

என்கண்கள் உன்னை
காணாத நாட்கள்
என்வாழ்வின் இருண்ட
காலம்தான் அவை...

இந்நிலையில் அவர்கள்
இருமாதம் ஒருவாரம்
காலம் உன்னை
காணாமல் எப்படி
வாழ்ந்து இருக்ககூடும்
வியப்புடன் நான்...

கீழ்அடித்தளம் இரண்டுள்ள
கட்டிடத்துக்குள் சென்றாலே
கண்இருட்டி பகலிலும்
காணாமல் போய்விடுவேன்...

இரண்டாயிரம் அடிக்குகீழ்
இரவுபகலாக கண்மூடி
பார்த்தாலே நெஞ்சம்
பதைத்து திகைக்கிறது...

உயிருடன் நீங்கள்
இருப்பதை நாங்கள்
உணர்ந்திடவே நாட்கள்
ஆகியது பதினேழு...

இயந்திரத்தை படைக்கும்
நாம் கடவுள்
நம்மை காப்பாற்றும்
அவையும் கடவுளாய் ...

மீண்(ட்)டு உயிர்பெற்று
வந்திருப்பதை படிக்கும்
சமயம் என்னுயிரை
மீண்டும் அடைந்தேன்

மரணம் அல்லாத
மரணத்தை முத்தமிட்ட
ஒவ்வொருநாளும் வாழ்கையின்
மறக்கமுடியா பக்கங்கள்

அனைவர் மனத்தின்
தைரியமும் வலிமையும்
உங்களை மீட்டு
குடும்பத்துடன் ஒன்றிணைத்து...

நம்பிக்கையின் வெற்றி
இனிவரும் நாட்களும்
என்றும் நிலைத்து
மகிழ்ச்சியுடன் நீண்டாயுளுடன்
வாழ்ந்திட இறைவனைவேண்டி
வாழ்த்துகிறேன் உங்களை...

செய்தி வாசிக்க

Wednesday, October 13, 2010

நீ... நான்... கடிகாரம்...

உன்விழியின் கருமணியை ஒருமுறைதான்
கடிகாரத்தின் முட்களை போன்று
சுழற்றினாய் எந்தன்மீது ஊசல்குண்டாய் 
நில்லாமல் என்மனமோ ஆடிக்கொண்டு...

Tuesday, October 12, 2010

தாயும்... பிறந்தநாளும்...

தான் பெற்றெடுத்த
பிள்ளை அழுதிருக்க
தன் அ(மு)கம்
மகிழ்ந்த தாயை
மண்ணில் கண்டதுண்டோ?
உண்டெனில் நம்புவீரோ?
யாரென அறிவீரோ
நம்வாழ்வில் தினம்
காண்கிறோம் என்றால்
நீவிர் வியப்பீரோ?
நம்தாய் என்றெனில்
மனம் திகைப்பீரோ?

பிறந்த அந்த
ஒருநாள் மட்டும்நாம்
அழகுரலிட அவள்
சிரிக்கின்றாள்...
நம் பிறந்தநாளை
நினைத்து ஆண்டு
முழுதும் ஆனந்தம்
அடைக்கின்றாள்...

ஒருசிலரோ தினம்
தன் பிறந்தநாளை
கொண்டாடிக்கொண்டு!
தாயை அழவிட்டு
தான் மனநிறைவுடன்
வாழ்ந்துக்கொண்டு!!

Fantastic answer by Dr Kalam to a question asked at the BBC....

Question - Define BIRTHDAY.... .....?

Answer = The only day in your life, when you cried and your Mother was smiling..... .........:-)

Sunday, October 10, 2010

கண்(ணே)...


கண்ணாடிமுன் நின்றால் மட்டும்தான்
எந்தன் உருவம் காட்டுகின்றது
உயிரற்ற பொருள் என்றாலும் - அதில்
உயிராய் என்னுள்ள உன்னை...

கண்மூடி நின்றாலே போதும்
உந்தன் உருவத்தை காட்டுகின்றது
உயிராய் உன்னை சுமக்கும் - எந்தன்
உள்ளத்தையும் குடியிருக்கும் உன்னையும்...

Saturday, October 9, 2010

காதல்...


இயந்திரத்தில் இயங்கும் எந்திரனுக்கும்
பெண்மீது காதல் வருகின்றது
இரத்தத்தில் இயங்கும் என்னிதயத்திற்கு - எப்படி
உன்மீது வராமல் போகும்?

Friday, October 8, 2010

பார்வை...


ஓராயிரம் பார்வையிலே உன்பார்வையை
நான் அறிவேன் என்ற கவிஞனின் வரியும்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை
நான் எழுதுவேன் என்ற கவிஞனின் வரியும்

வாழ்வில் இது சாத்தியமோ என்றிருந்தேன்
உன்னை காணாத நாள்வரை...

வாழ்வில் இது சத்தியமே என்றுயுணர்ந்தேன்
உன்னை கண்ட நொடிமுதல்...

Thursday, October 7, 2010

எண்ணம்... சிதறியது.... வாழ்கையும்...


கழுத்து வரையுள்ள சிகையினை
சவுரியுடன் பிணைத்து நீளப்படுத்தி
தன்வனப்பினை மேம்படுத்தி மகிழும்
கவரும் பெண்நிலையும் இன்று
காலத்தின் கோலத்தில் மாறிவீற்றிருக்க...

இவனோ!
மூளையின் திறமையாய் தேர்வினை
எழுத்துவடிவில் தேர்ச்சி பெற்றிருந்தும்
உடலின் தகுதியாய் தேர்வில்
தோல்வியினை சந்திக்க நேருமென்ற
உணர்ச்சியின் காரணமாய் செய்தது...

காவல்வேலை தேடியவன் இன்றோ
கைதியாய் காவல் நிலையத்தில்
வஞ்சிமகளும் மாற்றுவழியில் கவர்ந்திழுக்க
வாலிபன் இவன்வாழ்கை பிழைப்பிற்கு - சிந்திக்காமல்
தன்னை சீரழித்துக்கொண்டது ஏனோ?

செய்தி

Wednesday, October 6, 2010

தங்கம்...

அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

தன்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து
திருமணம் முடிக்க இயலாமல்
கிராம்கூட வாங்க வழியில்லாமல்
துடிக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க!

தான்வாங்கிய சவரன்கள் குறையென
புதுவடிவம் மலிவுவிலை அழகாய்
எங்கு கிடைக்குமென்று நாளும்
தேடிஅலையும் கூட்டம் ஒருபுறமிருக்க!

நாட்டிற்கு ஒருகடை திறந்து
ஊருக்கு ஒருகடை திறந்து
முக்கிய சாலைக்கெல்லாம் திறக்கின்றான்...
கடையாய் இருந்தாலும் மக்கள்
வராமல் போகலாம் என்றெண்ணி - பொன்னைவிட
மின்னும் மாளிகைகளாய் ஒருபுறம்...

Tuesday, October 5, 2010

நீயும் அழகு...

மழையாய் நின்றபின்னும் ரசிக்க
மண்ணில் விழும் தூறல் அழகு...

காற்றாய் கடந்தபின்னும் மேனிக்கு
இதம் அளிக்கும் தென்றல் அழகு...

இசையாய் முடிந்தபின்னும் ராகமாய்
செவியில் ஒலிக்கும் பாடல் அழகு...

எத்தனையோ எழுதியபின்னும் எண்ணத்தை
வார்த்தையில் கோர்க்கும் தேடல் அழகு...

என்னை பிரிந்தபின்னும் உயிராய்
மனதில் நிலைத்திருக்கும் நீயும் அழகு...

Monday, October 4, 2010

மீண்டும்... மீண்டும்...

காதலும் தோல்வியும்
ஒருமுறை மட்டுமல்லாது
நிரந்தரமான ஒன்றாய்...
இ(எ)ன்றாவது வாகைசூடும்
நம்பிக்கை உணர்வோடு - வாழ்வில்
மீண்டும் மலர்ந்துக்கொண்டே...

Sunday, October 3, 2010

முரண்பாடு...

இவனது பிறப்பு
தனியார் மருத்துவமனையில்

இவனது படிப்பு
தனியார் பள்ளிக்கூடத்தில்

இவனது பயணம்
தனியார் பேருந்துகளில்

ஆனால்!
வேலை மட்டும்
எதிர்பார்ப்பு அரசுபணியில்
இது சரியோ?

Saturday, October 2, 2010

நீ என் நண்பேன் டா !!!

நண்பன் சொல்லியது
  நீ ஒரு கவிஞன் டா!

கவிஞன் சொல்லியது
  நீ என் ரசிகன் டா!!

ரசிகன் சொல்லியது
  உன் கவிதைனா உயிர் டா!!!

உயிர் சொல்லியது
  அது என்னுள் நீதான் டா...

Friday, October 1, 2010

ஏழை...

பணம் இல்லாமல் போனாலும்
தங்கமென குணத்தில் நிறைந்தவன்....
ஆனால்!
விதியெனும் விளையாட்டில் சிக்கி
பணம் இல்லாமல் போனதால் - வாழ்வில்
அங்கம் குணமாகாத குறையோடு...