Tuesday, November 30, 2010

நான் உந்தன் பாவையடா...



நானிருப்பதோ காற்றும் ஒலியும்
புகாத கண்ணாடி கூண்டு...
அப்படியே இல்லாமல் போனாலும்
என்னருகில் நீயில்லாமல் போனால்
எந்தன் வாழ்வோ உயிரில்லாமல் - இதுபோல்
வாழும் வெறும் கூடுதான்....

சுவாசம் இல்லாமல் நான்
உயிர்வாழ்கிறேன் அதிசயமாய் என்றால்
காரணம்? நீதான் எனச்சொல்வேன்.
நான் ஆடிவீசும் காற்றில்
மலர்ந்த மலர்களின் வாசமும்
நான் அழைக்கும் கீதமும்
மெல்ல உன்னை வந்தடையும்
அதன்வழியே இந்தமங்கையின் மனதும்
உனைச்சேரும் நீயும் என்னை - காலத்தோடு
வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்தான்...

ஒற்றைக்காலில் தவம்செய்து இறைவனிடம்
வேண்டிய வரமடையும் முனிவன்போல்
எனைச்சேரும் வரைஉனக்காக நானும் - காத்திருப்பேன்
அனுதினம் ஓயாமல் உன்நினைவில்.

மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்...

ஒற்றைகையில் எந்தன் உடலின் மானம்
காக்கும் ஆடையை ஏந்திக்கொண்டு
மற்றொருகையோ? உயிர் கொடுக்க என்னுயிரை - ஏந்திவரும்
உன்னை ஏந்திட துடித்துக்கொண்டு...

வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - உனைநோக்கி
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.

Monday, November 29, 2010

நம்பிக்கை..

எலும்பில்லாமல் போனாலும் தும்பிக்கை
யானைக்கு பக்கபலம்...
நீயில்லாத வாழ்க்கைக்கு நம்பிக்கையே
எனக்கு பக்கபலம்...
என்றாவது ஒருநாள் கண்டிப்பாக - நீயுமென்னை
புரிந்துக்கொள்வாய் என்பதுதானது..

Sunday, November 28, 2010

நன்றி...


இனிய தோழா!

நான்கு அறைகளை கொண்ட
வெற்றிடமான கல்வெட்டு சுவரில்லை
எந்தன் இதயம்...
உங்களுக்கான வாசகத்தை அதிலிருந்து
எடுத்து அள்ளி எளிதில்
உங்களுக்கு பதிலிட...
உங்களின் அன்பால் சுரங்கமாக
மாற்றப்பட்ட பலபேரின் உள்ளங்களைய்ம்
புதையலாக கொண்டது...
பூமிக்கு அடியில் கிடைக்கும்
கனிமங்களை தனியாக பிரித்து 
பயன்படுத்தும் முறைப்போன்றது...
பிறருக்கு நன்றியென்னும்
ஒற்றைச்சொல் சொல்லுவதும்...

பொன், மிக்க நன்றி தங்களின் இனிய மடலிற்கும் மற்றும் குறுஞ்செய்திக்கும்.... மற்றும் எனக்கு ஊக்கமளிக்கும் அனைவருக்கும்.

என் கண்மணியே....



இதுவரை !
வெண்படலத்தில்
மிதந்த எந்தன்
கருவிழியே
கண்ணீருக்குள்ளும்
சிலநேரங்களில் இன்பமாய்
நீந்துக்கின்றாய்...
பலநேரங்களில் சுகமாய்
மூழ்குகின்றாய்...
ஒருவேளை நான்
கண்ணோடுவிட்டு சென்றால்
வேறொருவருடன் பொருந்திக்கொள்
அவ்வாறாவது உயிர்வாழ்ந்திடு
மறுபுறம்  நானும் 
வாழ்வேன் உன்னால்
அடைந்தவரின் மனதுக்குள்...

கண் இமைகளும் மறக்காது...

 
உன்நினைவுகளால்
பயணத்திலும்
வேலையிலும்
கண்மூடி என்னைநான்
மறந்து விடக்கூடாது
என்றோ என்னிமைகள்
இப்பொழுதெல்லாம்
ஓயாமல் துடித்துக்கொண்டு
உனக்காக இரவினில்
தூக்கத்திலும் சேர்த்து....

கண்ணுக்குள் இருக்கும்
கண்ணீரை வெளிவராமல்
தடைச்செய்யவா?
வெளியே(ற்)றி கண்களும்
வற்றிவிடக்கூடாதென்றா?
ஆனால்
என்னிமைகூட உன்னை
மறக்க முடியாமல்...
இமை(ற)க்கும் நேரம்கூட - நானுன்னை
மறக்க மனமில்லாமல்.

Saturday, November 27, 2010

விதி மாறும்...


தோழியே!!!
ெயரினில் கொண்டதனாலா
வாழ்வில் அடையாமல்போனாய்?
ணவனால் நடைப்பிணமானாய்
காதலனால் படுத்தபிணமானாய்
ஒருவன் வெட்டியானாய்
பிணத்தின்மீது காதலென்றுசொல்லி...
அவனும் இன்றும்
தன்னுடலை மாய்த்துவிட்டு
உன்னுயிரை எடுத்துசென்று
உன்னோடு உயிரைவிட்டு
உன்னை கொன்றுக்கொண்டு
உன்பெயரினை யாருரைத்தாலும்
நீயேயுரைத்து பார்த்தாலும்
அடையாதபடி செய்துவிட்டு...

இன்றுவரை நீயடையாத
அமைதியினி மயானமான
உன்னுள்ளத்தில் தோன்றட்டும்
நடந்ததெல்லாம் மறக்கட்டும்

இனியாவது இறையருளால்
உன்மனத்தின் குற்றயெண்ணம் 
முழுமையாய் மறையட்டும்
உன்காலம் மாறட்டும்.
உன்வாழ்வு மலரட்டும் - உற்றதுணையாக
உன்னோடு நாங்களும்...



அவனது ஆத்மா சாந்திடைய
எந்தன் கண்ணீர்அஞ்சலிகள்…
உனக்கு வரிகளின் வழியே
எந்தன் ஆறுதல்கள்…

வழி(லி) மாறாமல்...

 














கண்ணா!!!
ீசிய காற்றில்
உன்மீது விழுந்தேன்!
கல்மீது விழுந்திருந்தால்
ஊர்ந்தாவது சென்றிருப்பேன்!!
உன்கண்ணீர் கடல்மீது
அன்பாய் விழுந்தனாலோ?
தத்தளித்து வாழ்ந்தாலும்
உன்னோடுவாழ ஆசைக்கொள்கிறேன்
நீயென்னை கரைசேர்த்திட
நினைத்தாலும் நடந்திடாமல்
சக்கரைக்குள் மடிந்துபோகும்
எறும்பாய் உயிரைவிட்டுக்கொண்டு...
கண்ணீரையும் கற்கண்டாய்
மரணத்தையும் சுவைத்துக்கொண்டு...   

Friday, November 26, 2010

மன்னிப்பாயா....


// ஒருநாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனைநான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா//


உன்னை பார்க்கும் பொழுதும்
உன்னை நினைக்கும் போதும்
என்னை அறியாமல் சிரிக்கிறேன்.

உன்னை பார்க்காத நாளிலும்
உன்னை நினைக்காத நொடியிலும்
என்னை நானே வெறுக்கிறேன்...

உன்னை புரிந்துக்கொள்ள முடியாமல்
உனைநான் கொல்லாமல்கொன்று புதைத்தேன்.

என்னை புரியவைக்க முடியாமல்
எனைநான் கொல்லாமல்கொன்று புதைக்கிறேன்...

Thursday, November 25, 2010

இழந்துதான் பெறவேண்டுமா?

எதையும் இழப்பதற்கு வாழ்க்கையில்
நாம் துணிந்தோம் என்றால்
எதற்காக இழக்கிறோமோ வாழ்வில்
அதுநம்மை வந்தடையும் என்றார்கள்...
ஆனால்!
அவளுக்காக உயிரை இழக்கவும்
ஆயுத்தமாய் இவன் தயாரானான்
அவளின் கடைக்கண் பார்வைக்கூட - கிடைக்காமல்
காத்துக்கொண்டு தினமும் மடிந்துக்கொண்டு...

Wednesday, November 24, 2010

உறவுகள்...


செடியில் மலர்ந்து
உதிர்ந்து போகும்
பூக்களல்ல!

உதட்டில் அழைத்து
நொடியில் மறந்து
போவதற்கு...

மண்ணை பிளந்து
முளைத்து வந்த
விதைகள்!

உள்ளத்தில் நிறைந்து
பிறந்து வரும்
சொற்(ந்தங்)கள்...

உங்களில் நான்
எவ்வாறோ?
ஆனால்!
என்னில் நீங்கள்
இப்படித்தான்..

Tuesday, November 23, 2010

நினைவுகளால்....

கோடைக்காலம் போன்று
பகல்நேரங்கள் உன்நினைவால்
என்னுள் நீண்டுக்கொண்டு
அதில்!
ஒவ்வொரு நொடியும்
என்வாழ்வில் துடிதுடித்து
நான் இறந்துக்கொண்டு
ஆனால்...
ஒவ்வொரு நாளும்
இரவுநேரத்தில் மீண்டும்
மீண்டும் பிறந்துக்கொண்டு....

Monday, November 22, 2010

மாறும் என்ற நினைவோடு...

பெண்ணின் மனதினை
ஆண்கள் புரிந்துக்கொள்வது
என்பது கடினம்தான்
முடியாத ஒன்றும்தான்
ஆழம் தெரியாத கடலாய்...

ஆனால்!
எந்தன் இதயத்தையும்
உன்னால் எப்படி
புரிந்துக்கொள்ள முடியாமல்
போய்விடக்கூடும்?
மனதுக்குள் புரியாத புதிராய்

புரிந்தும் புரியாமலா?
நான் உன்னை
புரிந்துக்கொள்ள முடியாமல்
இதனையும் நேசித்துக்கொண்டே
வாழ்க்கை என்னுள் நம்பிக்கையாய்.

பேசுவது என்ன தெரியாது?

நம்மில் யார்
முதலில் அழைப்பதென்ற
எண்ணம் வந்ததில்லை
ஆனால்....
அழைத்து எல்லாம்பேசி
முடிந்தபிறகு யார்
இன்றும் அழைப்பினை
முதலில் முடித்துக்கொள்வதென்று
போட்டியிட்டு கொண்டே
பலமணி நேரங்கள்
தொடர்ந்து பேசிக்கொண்டே...

சந்திரன் சூரியனை கண்டிட
சூரியன் சந்திரனை கண்டிட
பொழுதுகள் மட்டும் மாறிக்கொண்டே
நானும்நீயும் மாறாது பேசிக்கொண்டே...

Friday, November 19, 2010

செய்வதறியாது....



நமக்குள் உரையாடல்கள்
வாதமாய் உருமாறிட
உந்தன் செவ்வாயை
எந்தன் விரல்கொண்டோ
அல்லது இதழ்கொண்டோ
மூடமுடியாமல் அழைப்பின்
தொடர்பினைத் துண்டித்துக்கொண்டு - என்னையும்
அலைபேசியையும் க(த)ண்டித்துக்கொண்டு...

மனதின் ஏக்கம்....

Thursday, November 18, 2010

விடை தெரியாமல்...

நான் பார்க்கிறேன் 
என்பதற்காக
என்னை காணநீ
வருகிறாயா?
இல்லை!!!
நீயே வருகிறாய் 
என்பதற்காக - மழையே
உன்னை நான்
பார்க்கிறேனா?

Wednesday, November 17, 2010

தற்கொலை...


புகைவண்டி ரதமே!!!
காதலுக்காக மட்டும்
இறைவனின் பொற்பாதத்தையும்
அவளின் பாதத்தையும்
தொழுதிட்ட என்சிரங்கள்...
எக்காரணத்திற்காகவும் உன்பாதத்தை
என்றும் தொழாது...

உன்னை எதிர்கொள்கிறேன்
முடிந்தால் நெஞ்சோடு
அணைத்து உன்னோடு
கொண்டு(ன்று) செல்....
நான் அன்பி(வளி)ற்கும்
உனக்கும் அடிமையாய் ....

Tuesday, November 16, 2010

தானமும்... தர்மமும்...

நான்!
தானமாய் உனக்கு
அளிக்கிறேன் என்னுயிரை...
அதற்கு
தர்மமாய் உன்னிடம்
வேண்டுகிறேன் உன்அன்பை....

Monday, November 15, 2010

உன்னால் முடியும்...

பெண்ணே!
சிறகுகளே அறுக்கப்பட்ட பறவையாய்
நீயிருந்தால் பறக்க முடியாதென்று
மனதில் நினைக்கலாம் உண்மைதான்.
இறகுகள் வெட்டப்பட்ட பறவையாய்
நீயிருப்பதால் பறக்க முடியும்
மீண்டு(ம்) என்பதை உணர்ந்துவிடு.

ஆனால்!
இறகுகள் நறுக்கப்பட்டு மீண்டும்
முளைத்து இருப்பதையும் மறந்து
பறப்பதற்கு என்றுமே முயற்சிக்காமல்
முன்புபோல் பறக்க முடியாதென்று
மனதுக்குள் நீயே நினைத்து
உன்னை ஏன்? மு(அ)டக்கிக்கொள்கிறாய்...

ஆதலால்!
நினைத்திடு! முயற்சித்திடு!! பறந்திடு!!!
வீழ்ந்த இறகுகள் துளிர்ந்திருக்கும்
மகிழ்வோடு உலகத்தை வலம்வந்திடு
புதுஉலகம் உனக்காக காத்திருக்கு...
விடியுமென்று நம்பும் நீ - உன்னால்
முடியுமென்பதையும் உலகத்திற்கு வாழ்ந்துக்காட்டு...

Sunday, November 14, 2010

ஏனோ?














  நீ முத்தமிட நெருங்கிட
அரும்பும் மலர்கிறது!
ஆனால்...
என் மலர்ந்த இருகண்களோ 
மொட்டாய் மூடிக்கொள்கிறது!!

Tuesday, November 9, 2010

முத்தமும்... உணர்வும்...


உந்தன் வாசத்தை
நாசியும் சுவாசிக்காமலே!

உந்தன் இதழ்ரசங்களை
நாக்கும் சுவைக்காமலே!!

எந்தன் தோல்களின் வழியேயும்
இரண்டையும் உணர்கிறேன்

உந்தன் அன்பான முத்தத்தால்...

Friday, November 5, 2010

தீராதவலி (தீபாவளி)


குளிக்கும் எண்ணெயில் என்கண்ணில் இருக்கும்
உந்தன் உருவத்தை பார்த்தேன்...

எரியும் தீபஒளியில் என்சிந்தையில் இருக்கும்
உந்தன் முகத்தை பார்த்தேன்...

உடுத்தும் புத்தாடையில் என்மனதில் இருக்கும்
உந்தன் எண்ணங்களை பார்த்தேன்...

சுவைக்கும் இனிப்பில் என்னுதட்டில் இருக்கும்
உந்தன் மொழிகளை பார்த்தேன்...

மின்னும் மத்தாப்பில் என்மூச்சில் இருக்கும்
உந்தன் சிரிப்பினை பார்த்தேன்...

இத்தனை எத்தனையோ என்னருகில் நீயில்லாமல்
தீபாவளி எனக்கு தீராதவலியாய்...

பனியும்... நீயும்....


நீரும் பனிக்கட்டியாய்
உறைந்து விடக்கூடும்
நொடிப்பொழுதினில்...
ஆனால்...
நீராகவே எக்கணமும்
நானிருக்கிறேன் எனைநீ
கட்டியணைத்திருப்பதால்...

எந்தன் முத்தம் ...


உன்னை காணும் சமயம்
கொடுப்பதற்கு நான் எடுக்கும்
பயிற்சியல்ல இது...

என்னருகில் நீயில்லாமல் போனாலும்
நானுனக்கு  கொடுத்துக்கொண்டே இருப்பதை
காட்டும் கா(சா)ட்சியாய்...

Thursday, November 4, 2010

என்று மாறும்?

படைத்திட எத்தனையோ
எண்ணங்கள் மனத்தினில்
உதித்துக்கொண்டு....
ஆனால்!
ஒரெயொரு எண்ணம்
மட்டும் உதிக்காமல்
தோன்றுவதை எழுதி
உயிர்கொடுக்க நினைக்காமல்
மறு(ற)ப்பதுதானது...

உன்னோடு நான்...


நீ கடல்!
நான் கலங்கரைவிளக்கம்...

காதலெனும் அலையில்
இன்று உன்னில்
நான் மூழ்கிக்கொண்டு....

எனக்கு நானே
வாழ வழித்தெரியாமல்...

எனைவிட்டு செல்லாமல்...


உன்நினைவால் கண்ணீர்
வடிப்பதனாலா? பன்னீராய்
மாறி காற்றினில்
கரைந்து நறுமணத்துடன்
மீண்டுமென் நாசியைடைந்து
என்னுள் கலக்கின்றாய்...

கண்ணில் நீராய் 
வெளியேறி  காற்றாய்
புகுந்துக்கொண்டு  மனதுக்குள் -  மீண்டும்
எனைவிட்டு செல்லாமல்...

Tuesday, November 2, 2010

ஆ(ரா)ய்வு...


பூக்களின் இதழ்கள்
தேன் சிந்தாதபோது
உன்னிதழ்கள் மட்டும்
எப்படி எப்பொழுதும்?

Monday, November 1, 2010

மதுவின் விண்ணப்பம்...



பெண்ணே!
ஒன்று நீயாவது
அவனின் இதழ்களை
பருகிடு....
இல்லை!
என்னையாவது அவனை
பருகிடவிடு...