Monday, May 31, 2010

குளிக்கும் மஞ்சள்...

மஞ்சளே நீயும்
சிவந்தது ஏனோ?
உன்னை கையால்
தரையில் தேய்த்து
உரசியதாலோ? - இல்லை
மங்கையின் நாணமுற்ற
சிவந்த  கன்னத்தில்
உன்னை பூசியதாலோ?

Sunday, May 30, 2010

ஓரவஞ்சனை...


மழையே!

உனக்கும் ஏன் இந்த
ஓரவஞ்சனை...
என்னவளை போல்...
என்னின் ஓர்கன்னத்தில்
மட்டும் அளித்த
முத்தத்தை போல்..

உன்னை ரசித்து கொண்டிருக்கும்
இன்பவேளையில் என்வீட்டின்
ஒருபக்க சுவற்றை மட்டும்
நனைத்து தூறல் போட்டாயே...

Thursday, May 27, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 1


நண்பனாக அவனிருந்திருந்தால்
தூய்மையான மனதுடன்
கைகுலுக்கி பரிசினை
வழங்கி வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...இல்லை....
காதலனாக அவனிருந்திருந்தால்
அன்பான எண்ணத்துடன்
கட்டியணைத்து முத்தம்
கொடுத்து வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...


ஆனால்,
இரண்டும் இல்லாமல்
வாழ்த்தினை சொல்லலாமா?
வேண்டாமா? என்று
இருதலை கொல்லிஎறும்பாய்
ஏக்கமான நினைவுகளுடன்
மனதுடன் தவித்துக்கொண்டு
இங்கே இவன்...

Wednesday, May 26, 2010

இரங்கல் - விமான விபத்து...


விமான தாயே!

தன் சொந்தங்களை கண்டு
இருவரின் சந்தோஷத்தை பெருக்கிடவும்
தம்முள் ஆறுதலை ஒருவருக்கொருவர்
பரிமாறி சோகங்களை  குறைத்திடவும்

எத்தனையோ எண்ணங்களை கனவாக
மனதிற்குள் சுமந்து நினைவில்
வானில் பறந்தார்கள் கண்மூடி
தாய் போல் உன்னைநம்பி...

தன் வயிற்றுக்குள் சுமக்கும்
கருவினை போல அவர்களை
உன்னில் சுமந்து உண்மையில்
ஆகாயத்தில் தாங்கி சென்றாயே...

கனவுகள் நினைவாக
மண்ணுலகத்தில் கால்கள்
படும்முன்னே கருவினை
விண்ணுலகத்திற்கு அளி(ழி)த்தாயே...

வெட்டவெளியில் எரியும் தனலில்
சுட்டும்விரலை நொடி தருணம்
காட்டவே சுட்டுவிடும் உணர்வினிலே
துடிதுடித்து போகும் என்இதயம்...

அடைக்கப்பட்ட உன்னின் அறையினில்
உடல்முழுவதும் நிமிடங்கள் எரிந்து
தீயில் கருகிபோன உயிர்களை
நினைத்து பதைந்துபோனது என்னுடலும்...

மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது

காதலியாய் உன்னை நினைத்து
வாழ்ந்த காதலன் விமானி
உன்னை கைவிட்டானோ? - இல்லை
பிறந்த வீடாய் உன்னை
வரவேற்கும் விமானதளம் தான்
அடைக்கலம் தர மறுத்ததோ? - இல்லை
வேறுக்காரணம் உன்னில் புதைந்தோ?
உன் மனமென்னும் கறுப்புபெட்டியை
இனி ஆராய்ந்து பார்த்து
நீ செய்வித்து கொண்டது
தற்கொலையா? - இல்லை
உனக்கு செய்விக்கப்பட்டது
கொலையா? என்று
தெரிந்து என்ன பயனோ?
பிரிந்த உயிர்கள் வரபோவதில்லையே?

உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்...

Tuesday, May 25, 2010

குழந்தையின் முத்தம்...


அர்த்தம் அறிந்து இராதவன்(ள்)
அள்ளி தந்த முத்தத்தில்...
அந்தரத்தில் மிதந்தேன் மகிழ்ச்சியில்
அன்பின் உச்சமான எல்லையில்...

அன்று!
என்னவன்(ள்) முத்தத்தில் முக்கனியின்
சுவையென பகிர்ந்தேன் நினைவில்...

இன்று!
அதனுள் தேன்கலந்த அமிர்தமாய்
வாழ்வில் உணர்ந்தேன் பூரிப்பில்...

Saturday, May 15, 2010

தாடி...

காதலால்...
வாடி சோகத்தில்
முகத்தில் முளைத்திருக்கும்
முற்களல்ல இவை...

காதலை...
வேண்டி இறைவனுக்காக
பூந்தோட்டத்தில் பூத்திருக்கும்
பூக்களுமல்ல இவை...

மின்னல்...


வானில்...
கருநிற மேக
கூட்டத்திற்குள் இருந்து
தலைகாட்டும் சிறு
வெண்ணிற ஒளிக்கீற்றே
என்னவளின்...
முன்நெற்றியில் தோன்றி
கவர்ந்து இழுக்கும்
நரைமுடியின் அழகைபோல்
நினைவூட்டி மறைந்தாயே!!!

Wednesday, May 12, 2010

தொட்டால் சிணுங்கி...


தொடாமலே சிணுங்கியது...
என்னின்
விழியாலும் மொழியாலும்
தொடாமலே
வெட்கம் கொண்டு
சிணுங்கும் உனைப்பார்த்து...

Sunday, May 9, 2010

கோடையில் ஓர் காதல்...

பெண்ணை கண்டதும் காதல் பிறக்கும்
உன்னை காதல் கொண்டும் மலரவில்லை
காரணம்,
நான் கவிஞன் இல்லை!
காதலனாய் என்றென்றும்...
இன்று நான் கவிஞன்!
இங்கு நீ கவிதையாய்...
காரணம்,
கோடையின் பிறப்பா? - அல்ல
உன்னின் சிறப்பா?


தார்சாலையில்
தனியே சென்றேன்
எதற்கோ தலைகுனிந்தேன்
என்முகத்தை தரையில் கண்டேன்
பயந்தேன் சூரியனை எண்ணி!!!
சற்றே நிமிர்ந்தேன் - உன்
குனிந்த முகத்தில் அவனை கண்டேன்
வியந்தேன் உன்னை எண்ணி!!!
மயங்கி போனேன்
காரணம்,
கோடையின் சதியோ? - அல்ல
இந்த மதியோ?


மேகமாய் நீ இருந்தால்
தென்றாலாய் நான் வருவேன் - என்
மோகம்தன்னை அறிந்திடுவாய்!
தேகம்தன்னை அளித்திடுவாய்!!!
தூறல் பொங்கிடுமே...
காரணம்,
கோடையின் வியர்ப்பா? - அல்ல
உன்அன்பின் நனைப்பா?


கோடையில்...

உன்...
வாடைகாற்று வீசினாலே போதும்!
ஓடைகாற்றும் குளிரும் வேண்டாம்!!!

உன்...
சேலைமுகப்பு குடைபிடித்தாலே போதும்!
இளம்சோலை நிழலும் வேண்டாம்!!!

உன்...
இதழ்களின் முத்தமொன்று போதும்!
பழங்களின் பிளிசாறும் வேண்டாம்!!!

உன்...
கரம்கோர்த்து நடந்தால் போதும்!
கரையோரங்கள் எதுவும் வேண்டாம்!!!வேண்டாம் வேண்டாம்
கோடை எவருக்கும்!
வேண்டும் வேண்டும்
கோடை எனக்கு மட்டும்!!!


காதலியின் அருமையை உணர்ந்தேன்
கோடையின் பெருமையாய் உன்னில்...

Saturday, May 8, 2010

தோழியே! மனம் மாறியதேனோ?


உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினாய்
வேப்பம்பூவின் தன்மையை
மனதுக்குள் கொண்டாய் - ஆனால்
ரோஜாப்பூவின் தோற்றத்தை
முகத்தில் காட்டியது எதனாலோ?

அகத்தின் அழகானது
முகத்தில் தெரியும் என்பதனை
மறந்து இயற்கைக்கு எதிராய்...
செயற்கையாய் நடிக்க துணிந்தாய் - அறிந்திட
அருகினில் நாங்கள் யாருமில்லை
என்று மனதில் எண்ணியதாலோ?

உறவுகள் கைபிடித்து கொடுக்காமல்
கைபிடித்தவனை உறவுகளுக்கு காட்டியதால்
தோள்தட்டி ஆறுதல்தரும் நிலையில்
அவர்கள் இல்லாமல் போனாலும் - அவர்கள்
கைக்கொட்டி சிரிக்கும் நிலைமை
வாழ்வில் வராமலிருக்க நினைப்பதனாலோ?

தண்ணியடிக்கும் கணவன் என்பதனாலோ
தண்ணீரும் குடிக்க மறுக்கின்றாய்
கண்ணீரை தினம் வடிக்கின்றாய்
செந்நீரை சிந்த சிந்திகின்றாய் - அதனால்
தூக்கத்தையும் ஊக்கத்தையும் இழந்து
துக்கத்தையும் ஏக்கத்தையும் கொண்டதனாலோ?


மனஅழுத்தத்தில் உன்னை நீயே
மாய்த்துக்கொள்ள நினைப்பது தவறு
இன்று சோகங்களை சொல்லாமல்
உன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை
நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...

Friday, May 7, 2010

கோலமும்... நீயும்...


இரவில்...
என் வீட்டின் முற்றத்தில்
வானில் காணும் நட்சத்திரங்களை
சிறைபிடிக்கின்றேன்...

பகலில்...
உன் வீட்டின் வாசலில்
தரையில் கோலம் இடுவதற்கு
புள்ளிகளாய் அவையிருக்க...

பகலில்...
மேக கூட்டங்களை
கைது செய்கின்றேன்

மாலையில்
புள்ளியற்ற கோலமாய்
நீ தீட்டிட....

என் மனதினிலும்
என் வீட்டினிலும்
நீ மாக்கோலம் போடும்
நாள் எந்நாளோ?

காணாத கோலங்களும்
அழியாத கோலங்களும்
நான் உன்னில் காணும்
நாள் எந்நாளோ? என்று...

Thursday, May 6, 2010

Wednesday, May 5, 2010

ஆச்சரியம்... ஆனால்...உண்மை...


ஆயிரம் பேரை கொன்றால்
அரை வைத்தியன் என்றார்கள்
அப்படியிருக்க...
எத்தனையோ பேரை கொல்கின்றாய்
உன் விழியாலும் மொழியாலும்!
உனக்கு டாக்டர் கிடைக்காமல்
போனதேனோ?
ஆச்சரியம்தான்!!!
ஆனால்...
அரசியல்வாதிக்கும் பிறருக்கும்
கிடைப்பதேனோ?
உண்மையில் பல்லாயிரம் பேரை
கொள்கையாலும் வாக்குறுதியாலும்
அவர்கள் கொல்வதனாலா?

(ஆயிரம் வேரை கண்டவன் அரை வைத்தியன் என்பது பழமொழி)

Tuesday, May 4, 2010

ஆனாலும்... (முரண்பாடு)


உன் விழியால்
என்னை கொன்றது
நீ...

உன்னால்
தண்டிக்கப்பட்டு கவிஞானாக
நான்...

Monday, May 3, 2010

கூந்தலும்...கொண்டையும்...


என்னவளே!..
நீர்வீழ்ச்சி போல் கொட்டியும்
அடி முதுகின் வரை
கங்கை போல் பாய்ந்தும்
இருந்தவளை....
அகத்தியனின் கமண்டலத்தில்
அடைக்கப்பட்ட கங்கையை போல்
உச்சங்தலைக்கும் கழுத்திற்கும்
இடையே உன்னால் அடைக்கப்பட்டும்
கண்களை கவர்ந்துக்கொண்டு...