இரத்தஉறவாய் இல்லாமல் போனாலும்
நண்பனின் பிறந்தகுழந்தை என்றானாலும்
இருகைகளிலே பூவாய்ஏந்தி முகம்வரை
அள்ளியணைத்து கன்னத்தில் முத்தமிட்டவன்
அவர்களின் சுற்றம் சூழ்ந்திருந்தாலும்
உள்ளத்தின் எண்ணமாய் என்னசொன்னாலும்
சிறுகவலையும் உள்ளத்தில் கொள்ளாது
கொஞ்சிடும் அன்பினை வெளிகாட்டியவன்.
இன்று!
அவனின் விரல்கள் மட்டும்தீண்டி
கைகள் தூக்க துடித்தும்
மனதின் அலைகள் தடுத்திட
தீண்டாமை எனும்பாவ செயல்போல்
எல்லை தாண்டா கடலென
வாரிமார்போடு அணைத்திடாது வந்ததேனோ?
யார் அறிவாரோ?
முதல்குரலென உன்அழுகையை நித்தம்
கேட்க இயலாது என்பதனாலோ?
இல்லை…
பிள்ளை மொழியினை அருகிலிருந்து
ரசிக்க இயலாது என்பதனாலோ?
இல்லை…
மார்பின் மீதேறி விளையாடிடாமல்
தொலைவில் இருப்பாய் என்பதனாலோ?
இல்லை…
விதவிதமான ஆடையும்பூவும் தினம்
அணிந்து காணயிலாது என்பதனாலோ?
இல்லை…
தோள்மீது அமர்த்தி உலாவர
காலம் அமைந்திடாது என்பதனாலோ?
இல்லை
ஆள்காட்டி விரலை இறுகபிடித்து
நடைபயிலும் நிலையிராது என்பதனாலோ?
அவன்!
இல்லை இல்லையென ஏராளமாய்
சொல்லிகொண்டு போகவேண்டும் என்பதனலோ?
இல்லை
விதியாய் வாழ்வில் இறைவன்
செய்திட்ட கோலம் என்பதனாலோ?
எதுவோ?
எதுவாயினும் அவனோடு புதைந்து
போகவேண்டும் வெறும் கனவுகளாக…
1 comments:
உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் இறைவன் இருக்கிறான் ஜி
Post a Comment