Thursday, September 23, 2010

நினைவுகளை அழிக்க...


வெந்நீரில் தினம் குளிக்கின்றேன்
செந்நீர் இல்லாமல் வடுக்களாய்
உந்தன் நாவால் சுட்டதுபோல்
எந்தன் மேனியில்...

உன்நினைவாலே சுட்டு பொசுங்கும்
பொன்னான மேனி என்பதனாலா?
மண்சுடும் வெந்நீரை என்மேனியில்
ஊற்றியும் ஒன்றும் செய்யாமல்
போனது என்னை?

உன்நினைவுகள் வீழ்ச்சியடைய
நீர்வீழ்ச்சியாய் சாய்த்துக்கொள்கிறேன்
தலையில் விழுந்து
தரையில் வீழ்ந்து
உன்நினைவால் அவையும்
நீர்த்துப்போகின்றன...

மடியவில்லை உன்நினைவுகள்
என்மனதுக்குள்
ஆனால்!
தளர்கின்றது நரம்புகள்
என்னுடலுக்குள்...

உன்நினைவுகள் என்னை
பிரியாவிடினும்
நீயில்லாமல் மண்நோக்கி
பிரிந்துக்கொண்டு
என்னுயிர்...

ஆவியில் குளியலறை சுவரும்
கண்ணாடியில் எந்தன் முகமும்
தெரியாமல் மறைகின்றது...
ஆனால்!
அக்கனமும் என்கண்கள் உன்முகத்தை
பிம்(இன்)பமாய் காண்கின்றது...

4 comments:

Aathira mullai said...

//ஆவியில் குளியலறை சுவரும்
கண்ணாடியில் எந்தன் முகமும்
தெரியாமல் மறைகின்றது...
ஆனால்!
அக்கனமும் என்கண்ணில் உன்முகத்தை
பிம்(இன்)பமாய் காண்கின்றது...//

அன்பின் அழுத்தம் கவிதையில் கண்ணாடி ஓவியம் போல் மிளிர்கிறது. உயிரைத் தாங்கும் கவிதையின் இதயம் இந்த வரிகள்.. அருமை..பலமுறை படித்துக்கொண்டே..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் அழகிய, அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

நீங்கள் மீண்டும் மீண்டும் படிக்கும் வகையில் வரிகள் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு...

Anonymous said...

வணக்கம் அன்பரே!எண்ணங்களை வார்த்தைகளாக எளிதில் பிரதிபலித்தது அற்புதம்!இருந்தாலும் repetition of words may be avoided.சந்தம் கருதி பிரயோகித்தாலும் மாற்று வார்த்தைகள் இன்னும் சுவை அளிக்கும். நான் உங்களை/ உங்கள் கருத்துக்களை /கவிதைகளை உன்னிப்பாக கவனித்து வருவதால் சிறிய விண்ணப்பம் என்று நினைக்கவும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அன்பருக்கு,

வணக்கம்...

வாழ்கையில் நிகழும் நிகழ்வுகளை வார்த்தைகளால் கோர்த்து எண்ணங்களாக இங்கே எழுதுகின்றேன். அதற்கு தாங்கள் அளித்த பின்னூட்டம் மகிழ்ச்சியை தருகின்றது.

சந்தத்தை சொந்தம் கொள்ளும் நிர்பந்தத்தில் ஒரே வார்த்தைகளை பந்தம் கொள்ளாதே என்ற தங்களின் கருத்தினை ஏற்று நிகரான பிறசொற்களை கையாள கவனம் கொள்கின்றேன்.

என்னையும் / என் கருத்துகளையும் / கவிதைகளையும் உன்னிப்புடன் கவனித்து வரும் நீங்கள் கூறுவது எந்தன் முன்னேற்றத்திற்கான ஊக்கமே. அதனை விருப்பத்துடன் நிறைவேற்ற முயல்கின்றேன்.


மிக்க நன்றி...